நியூசிலாந்து அணிக்கும் கோப்பை சொந்தம் – ஜோஸ் பட்லர் பரபரப்பு பேட்டி!!

நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஜோஸ் பட்லர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் இங்கிலாந்து அணி வென்று புதிய சாம்பியனாக உருவெடுத்துள்ளது. பல கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வீரர்கள் நியூசிலாந்து அணியும் வெற்றிக்கு தகுதியானவர்கள் தான் என கூறி வருகின்றனர்.

பரபரப்பான இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், தட்டு தடுமாறி 241 ரன்களை எடுத்தது.  இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதிலும் இரு அணிகள் தலா 15 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிய, இறுதியாக, அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வென்றது. இதனால், உலக சாம்பியனை முடிவு செய்யும் போட்டியில் எப்படி இதை மட்டுமே கணக்கில் கொண்டு வெற்றியாளர்கள் என கூற முடியும் என்கின்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், இங்கிலாந்து பேட்டிங் செய்கையில், 3 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது, கப்டில் த்ரோ வீசுகையில் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு செல்ல 5 ரன்கள் கொடுக்க வேண்டிய இடத்தில களநடுவர் தவறுதலாக 6 ரன்களை கொடுத்துவிட்டார். அப்படி கொடுக்கவில்லை என்றால் போட்டியை எப்போதோ நியூசிலாந்து வென்றிருக்கலாம் எனவும் கூறிவருகின்றனர்.

எவ்வளவு விமர்சனங்கள் எழுந்தாலும், இங்கிலாந்து உலக சாம்பியன் என்பதை இனி மாற்ற இயலாது. இருப்பினும், நியூசிலாந்து அணிக்கு ஆறுதலாக இங்கிலாந்து வீரர்களும் பேசி வருவது, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்பதை உணர்த்துகிறது.

நியூசிலாந்து குறித்து பேசிய ஜோஸ் பட்லர் கூறுகையில், “இறுதிப் போட்டியில் விளையாடிய இரு அணிகளும் தோல்விக்கு தகுதியான அணி அல்ல. அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்துக்கு பாராட்டுக்கள். அவர்கள் தோல்விக்கு தகுதியானவர்கள் அல்ல. இந்த தோல்வியை அவர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் கடினமானது. கோப்பையை அவர்களும் சொந்தம் கொண்டாட தகுதியானவர்கள்.

கிரிக்கெட்டில் மறக்க முடியாத போட்டியாக இது அமைந்தது என்று கூற விரும்புகிறேன். இது போன்று நடக்கும் என்று நம்பவில்லை. 50 ஓவர் முடிவில் ஆட்டம் ‘டை’ ஆனபோது ஒருவித விரக்தி ஏற்பட்டது. அதன்பின் பவுண்டரி எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்ததால் அந்த உணர்ச்சிகள் அனைத்தும் கடந்து சென்று விட்டன” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.