டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது ஐ.சி.சி
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி,சி., நேற்று வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 274 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.
74 ரன்கள் பின்தங்கிய நிலையில், நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் கேன் வில்லியம்சன் (139), ஹென்றி நிக்கோல்ஸ் (126) ஆகியோரின் அபார சதத்தால், 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால், கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டிலும் கலக்கிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தது. பாபர் அசாம் மட்டும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-1 என தொடரையும் கைப்பற்றியது.
ஆசிய மண்ணில் நியூசிலாந்து வெல்லும் 5-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். மேலும், 1969-ம் ஆண்டிற்குப்பின், வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கரும்படை.
இந்நிலையில் இந்த தொடரை இழந்ததன் மூலம் ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 7வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி நான்காவது இடத்தில் உள்ளது.
புதிய தரவரிசை பட்டியல்;
இடம் | அணி | புள்ளிகள் |
1 | இந்தியா | 116 |
2 | இங்கிலாந்து | 108 |
3 | தென் ஆப்ரிக்கா | 106 |
4 | நியூசிலாந்து | 105 |
5 | ஆஸ்திரேலியா | 102 |
6 | இலங்கை | 93 |
7 | பாகிஸ்தான் | 92 |
8 | விண்டீஸ் | 70 |
9 | வங்கதேசம் | 69 |
10 | ஜிம்பாப்வே | 13 |