இறுதிப்போட்டிக்கு வரவில்லை என்றால், உங்களிடம் உள்ள டிக்கெட்டை கேன்சல் செய்யுங்கள். இல்லையென்றால், விற்றுவிடுங்கள் என இந்திய ரசிகர்களிடம் கடுமையாக கேட்டுக்கொண்டார் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம்.
உலகக்கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடர் முழுவதும் மற்ற எந்த அணிக்கும் இல்லாத அளவிற்கு இந்திய அணிக்காக ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்திற்கு வந்து உற்சாகம் செய்தனர். அதற்க்கு ஏற்றாற்போலவே, இந்திய அணியும் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை தவிர, மற்ற அனைத்து அணியையும் துவம்சம் செய்து புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்கு நுழைந்தது.
இறுதிப்போட்டிக்கு நிச்சயம் இந்தியா தகுதி பெறும் என்று கணித்து ஏராளமான இந்தியர்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதமாக நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இறுதி போட்டிக்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும், மற்றும் பலர் வேண்டுமென்றே புறக்கணித்தால் அப்போதுதான் மைதானம் வெறிச்சோடி இருக்கும் எனவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்க்கு நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு கடுமையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், “அன்புள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களே. நீங்கள் இனியும் இறுதிப் போட்டிக்கு வர விரும்பவில்லை என்றால் தயவுசெய்து நீங்கள் பெற்றுள்ள இறுதி போட்டிக்கான டிக்கெட்டினை உலக கோப்பையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக உங்கள் மறுவிற்பனை செய்துவிடுங்கள். இதன் மூலம் லாபம் ஈட்ட முயற்சிக்காதீர்கள், தயவுசெய்து அதனை உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்து இறுதிப்போட்டியை கண்டுகளிக்க வாய்ப்பு கொடுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
.
.