இந்தியா – நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.
நாளை மறுநாள் தொடங்கவுள்ள முதல் டெஸ்டிலிருந்து நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் விலகவுள்ளார். அவருடைய முதல் குழந்தை இந்த வாரம் பிறக்கவுள்ளதால் அதன் காரணமாக முதல் டெஸ்டில் வாக்னர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதுவரை 47 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வாக்னர், 204 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையடுத்து வாக்னருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான மேட் ஹென்றி நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் குழந்தை பிறக்கவுள்ளதால் வாக்னர், வெல்லிங்டனுக்குச் செல்ல மாட்டார். குழந்தை பிறக்கும் வரை அவர் தவுரங்காவிலேயே இருப்பார். அவருக்குப் பதிலாக அணியில் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மேட் ஹென்றி இன்று அணியுடன் இணைகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் ஒருவேளை இடம் பெறாவிடில் அது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
மேட் ஹென்றி கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி டெஸ்டில் விளையாடினார். இந்த டெஸ்டில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். இந்த டெஸ்டில் நியூசிலாந்து தோல்வியடைந்தது.
ஹென்றிக்கு அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் லெவனில் இடம் பிடிக்க இவருக்கும் கைல் ஜேமிசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட டிரென்ட் போல்ட் உடற்தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று முதல் டெஸ்டில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறும்போது ‘‘தனிப்பட்ட முறையில் நான் போட்டியில் விளையாடும்போது விராட் கோலி போன்ற வீரர்களை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என விரும்புவேன். எனக்குள்ளே இப்படி ஒரு போட்டியை உருவாக்கிக் கொள்வேன். ஆகவே, விராட் கோலியை அவுட்டாக்குவதற்காக காத்திருக்க முடியாது.
ஆனால் அவர் தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்’’ என்றார்.