ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்… வாசிங்டன் சுந்தர் அதிரடி; நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கு !!

ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்… வாசிங்டன் சுந்தர் அதிரடி; நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கு

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவானும், சுப்மன் கில்லும் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 124 ரன்கள் சேர்த்திருந்த போது, சுப்மன் கில் (50) விக்கெட்டை இழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ரிஷப் பண்ட் (15) மற்றும் சூர்யகுமார் யாதவ் (4) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இதன்பின் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன் 36 ரன்களும், நீண்ட நேரம் தாக்குபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வாசிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 306 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக லோகி பெர்குசன் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

Mohamed:

This website uses cookies.