விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்தை கலங்கடித்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்து தகிடுதத்தம் போட்டது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது.
இதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், காயத்தில் இருந்து தேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் திரும்பியிருப்பது அவர்களின் பந்துவீச்சை வலுப்படுத்துகிறது. மூத்த பேட்ஸ்மேன் ராஸ் டெய்லருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் 100 போட்டிகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறப்போகிறார்.
நியூசிலாந்து அணி, உள்ளூரில் எப்போதும் அசுர பலம் வாய்ந்தது. டாம் லாதம், வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள். மற்றொரு பிரதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. வாக்னெரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இதனால் அவர் இன்னும் நியூசிலாந்து அணியுடன் இணையவில்லை. இதை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அழைக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கியது. அதற்கு இந்த தொடரில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் இந்த டெஸ்டில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நியூசிலாந்து கணிக்கப்பட்ட அணி:
டாம் லாதம்,
டாம் பிளன்டெல்,
வில்லியம்சன் (கேப்டன்),
ராஸ் டெய்லர்,
ஹென்றி நிகோல்ஸ்,
வாட்லிங்,
கிரான்ட்ஹோம் ,
அஜாஸ் பட்டேல்,
டிம் சவுதி,
டிரென்ட் பவுல்ட்,
மேட் ஹென்றி.