திருப்பி அடிக்குமா இந்திய அணி..? நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நாளை காலை நடைபெற உள்ளது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. நாளை நடக்கும் போட்டியில் வென்றால், தொடரைக் கைப்பற்றிவிடும் என்பதால், இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.
உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணி எந்த ஒருநாள் தொடரையும் இழக்கவில்லை என்பதால் நாளை நடக்கும் போட்டியில் வெற்றிக்காகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.
சமீபத்தில் மேற்கந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகச் சென்னையில் நடந்த ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மும்பையில் நடந்த ஆட்டத்திலும் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆனால், அடுத்து தோல்வியில் இருந்து மீண்டுவந்து தொடரைக் கைப்பற்றியது. அதுபோல நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வெல்லக்கூடும்.
இந்திய அணியில் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. நாளை நடக்கும் போட்டியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக மணிஷ் பாண்டே களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல, குல்தீப் யாதவுக்கு பதிலாக சஹலும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷைனியும் களமிறங்குவார்கள் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நியூஸிலாநத்து அணியைப் பொறுத்தவரைக் கடந்த போட்டியில் வெற்றிக்கு நிகோலஸ், லாதம், டெய்லர் முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் டெய்லரின் பேட்டிங் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்னமாக இருந்தது. நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் கேப்டன் லாதம் விளையாடியது இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருந்தது. நாளையப் போட்டியில் கப்தில், நிகோலஸ், டெய்லர், லாதம் நிச்சயம் சவாலாக இருப்பார்கள்.
கேப்டன் வில்லியம்ஸன் உடல்நிலை இன்னும்முழுமையாக சரியாகாததால், அவர் 2-வது போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. நியூஸிலாந்து அணியில் 6.8 அடி உயரத்தில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிஸன் நாளை அறிமுகமாவார் எனத் தெரிகிறது. ஹேமிஸ் பென்னட், சவுதி, குகிலின் ஆகியோர் இருக்கும் நிலையில் ஜேமிஸன் வருகை இன்னும் கூடுதல் பலத்தைத் தரும்.
இரு அணிகள் இடையேயான இந்த போட்டி நாளை காலை 7.30 மணியளவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.