அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி; அடுத்த போட்டிக்கான அணி அறிவிப்பு
வெலிங்டனில் நாளை நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வென்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முதல்முறையாக வென்று கோலி படை சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஹேமில்டனில் நடந்த 3-வது ஆட்டத்தில் ஷமியின் ஆர்ப்பரிப்பான பந்துவீச்சும், ரோஹித் சர்மாவின் டைமிங் 2 சிக்ஸர்களும் வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பியது.
நாளை நடக்கும் வெலிங்டன் வெஸ்ட் பேக் மைதானம் நியூஸிலாந்தின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 6டி20 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்தமைதானத்தில் நியூஸிலாந்து விளையாடி தோற்கவில்லை.
நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ஷைனி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கவில்லை. ஆதலால், இவர்களுக்கு நாளை வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை வழக்கம்போல தொடர்வார், ஆனால் நாளை ஆட்டத்தில் ரோஹித் சர்மா, அல்லது கேப்டன் கோலி இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவருக்கு பதிலாக ரிஷப்பந்த் களமிறங்குவர். அதேபோல மணிஷ் பாண்டே, ஷிவம் துபேக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், சாம்ஸன் ஆகியோர் களமிறங்கலாம். சாஹலுக்கு பதிலாக குல்தீப்பும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷைனியும் வாய்ப்பு பெறலாம் எனத் தெரிகிறது.
நான்காவது டி.20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி;
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, நவ்தீப் சைனி, வாசிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
———–