பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய இந்திய வீரர்கள்; இந்திய அணிக்கு எளிய இலக்கு
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்திலும், காலின் முன்ரோவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய மார்டின் கப்தில் 33 ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான காலின் முன்ரோவும் 26 ரன்கள் எடுத்தார்.
போட்டியின் முதல் ஓவரிலேயே நியூசிலாந்து வீரர்கள் இரண்டு சிக்ஸர்கள் விளாசியதால், இன்றைய போட்டியிலும் 200+ இலக்கு தான் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து வீரர்களை திணறடித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், ஷிவம் துபே மற்றும் பும்ராஹ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.