2019 உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா. இந்த உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதுவரை தென் ஆப்பிரிக்கா அணி 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் பட்டியலில் மூன்று புள்ளிகள் பெற்று 8 ஆம் இடத்தில் இருக்கிறது.
அதேநேரத்தில் நியூஸிலாந்து தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது. இந்தியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் வலுவாக இரண்டாம் இடத்தில் 7 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா கண்டிப்பாக வெற்றிப் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதேநேரத்தில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை விட பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக உள்ளது. போல்ட், பெர்குசன், ஹென்றி, நீஷம், கிராண்ட்ஹோம், சான்ட்னர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகின்றனர். பேட்டிங்கிலும் கோலின் மன்றோ, கப்தில், கேப்டன் வில்லியம்சன், டெய்லர், லாதம், நீஷம் என அதிரடி வீரர்கள் அணிவகுக்கின்றனர். தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து நியூசிலாந்து வீரர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை பேட்டிங்கும், பவுலிங்கும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணியுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் வென்று முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் நியூசிலாந்தும், தொடரில் இருந்து வெளியேறாமல் பாதுகாத்துக்கொள்ள தென் ஆப்பிரிக்காவும் கடுமையாக போராடும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் பங்கேற்கும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி கிடி 100 சதவீதம் தகுதி பெற்றுள்ளார்.
தற்போதைய உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களில் தோல்வியுற்ற தென்னாப்பிரிக்கா, 5-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் லுங்கி கிடி காயமடைந்தார். தொடையில் காயம் பட்டதால், அவரால் ஆட முடியவில்லை. டேல் ஸ்டெய்னும் காயமுற்று உலகக் கோப்பை முழுவதும் ஆட முடியாமல் வெளியேறி விட்டார்.
இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கல் உருவாகியது.
தற்போது லுங்கி கிடி குணமடைந்துள்ளதால், வரும் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு பலமடையும் எனக் கருதப்படுகிறது. இன்னும் 4 ஆட்டங்கள் மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.