தனியாக போராடி இலங்கை அணியின் கனவை கலைத்த கிளன் பிலிப்ஸ்; 167 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி
இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியில் நியூசிலாந்து அணியும், இலங்கை அணியும் மோதி வருகின்றன.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கெத்தாக முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பின் ஆலன் மற்றும் கான்வே தலா 1 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் – டேரியல் மிட்செல் ஜோடி, நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டேரியல் மிட்செல் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய நீஷம் (5),சாட்னர் (11), இஷ் சோதி (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் கடைசி ஓவரின் 4வது பந்துவரை தனி ஆளாக போரடிய கிளன் பிலிப்ஸ் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 64 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள நியூசிலாந்து அணீ 167 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கருணாரத்னேவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள இலங்கை அணி ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது. பதும் நிஷான்கா முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய குஷால் மெண்டீஸ் (4) மற்றும் டி சில்வா (0) ஆகியோரை டிரண்ட் பவுல்ட் தனது மிரட்டல் பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியதால் வெறும் 5 ரன்களுக்கே மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள இலங்கை அணி, நியூசிலாந்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.