இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருப்பதால், இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. அதேசமயம், இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், தொடரை வெல்லும் முனைப்போடு இன்று களமிறங்கியது.
டாஸ் வென்ற நியூசி., கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, குல்தீப் யாதவ்விற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசி., அணியின் தொடக்க வீரர்களான மார்டின் கப்திலை 11 ரன்னிலும், கார்லின் மன்ரோவை 10 ரன்னிலும் புவனேஷ்குமார் வெளியேற்றினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் இம்முறையும் சொற்ப ரன்னில் அவுட்டானார். அவர் 3 ரன்னில் பும்ராவால் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில், நிக்கோல்ஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.