இனி வரும் காலங்கள் இவர்களுக்கானதாக இருக்க வேண்டும்; சச்சின் விருப்பம் !!

இனி வரும் காலங்கள் இவர்களுக்கானதாக இருக்க வேண்டும்; சச்சின் விருப்பம்

புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாழ பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவர் கூறியதாவது:

”இனி வரும் ஆண்டுகள் குழந்தைகளுக்கானதாய் இருப்பது நல்லது. அவர்களே நமது எதிர்காலம். அவர்கள் தைரியமாக எதையும் பேச, நாம் அனுமதிக்க வேண்டும். அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

குழந்தைகள் மீது அன்பைக் காட்ட வேண்டும். அவர்கள் தவறு செய்ய அனுமதிக்க வேண்டும். பெரிய கனவுகளைக் காண வழிவிட வேண்டும். அவர்களின் உடல்நலன், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் கனவை அடைய வழிகாட்டுதல் அவசியம்.

அண்டை வீடுகளுக்கு அருகே பாதுகாப்பான விளையாட்டுப் பகுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல விருப்பமுள்ளவர்களை விளையாட்டுகளில் அனுமதிக்க வேண்டும். விளையாட்டு, ஒரு குழந்தையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் மட்டும் வைத்திருப்பதில்லை. குழுவாகச் செயல்படுவது பற்றியும் உறவுகளைப் பேணுவது குறித்தும் சொல்லித் தருகிறது.

எந்தவிதப் பாகுபாடுமின்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அதேபோல இளைஞர்கள், தங்களின் குழந்தைமையை மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆர்வம், உற்சாகம் ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்”.

இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.