எங்க அடுத்த டார்கெட்டே இது தான்; இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் அருண் ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணிக்கு, இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவது இந்திய அணியின் அடுத்த இலக்கு என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலம் கொண்ட தலை சிறந்த அணியாக உருவெடுத்து, உலக கிரிக்கெட் அணிகளை திணறடித்து வருகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் பும்ராஹ் மற்றும் புவனேஷ்வர் குமார் இருக்கும் வரை முகமது ஷமி, இஷாந்த் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் கூட ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கு தேவையில்லை என்ற இருக்கும் நிலையில், 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக இன்னும் குறைந்தது மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், லிமிடெட் ஓவர் போட்டிகளில் புவனேஷ்வர் குமாரும், பும்ராஹ்வும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கு முன்னதாக இன்னும் மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும். இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனும் ஆலோசித்து வருகிறேன். எங்களின் அடுத்த இலக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவது தான்.
எதிர்வரும் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிக்களுடனான முத்தரப்பு டி.20 தொடர் இளம் பந்துவீச்சாளர்களின் திறமையையும் திறனையும் கண்டறிய நமக்கு கிடைத்த வாய்ப்பு. முத்தரப்பு தொடரை இளம் அணியிடம் ஒப்படைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றியுடன் நாடு திரும்பிய இந்திய அணி, அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையில் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி துவங்க உள்ளது.