முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய ஷிகர் தவானை கடுமையாக சாடிய கவாஸ்கர்
இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.
டெஸ்ட் தொடருக்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 39 ரன்களே சேர்த்தார். அத்துடன் பீல்டிங் செய்தபோது ஸ்லிப் திசையில் கேட்ச்களை கோட்டைவிட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் சொதப்பிய ஷிகர் தவானை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது, “தவான் தனது ஆட்டத்தில் முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் ஆனால் அதை அவர் செய்வதற்கான முயற்சி கூட எடுப்பது போல் தெரியவில்லை. தற்போது வரை தனது வழக்கமான ஆட்டமே போதும் என்று தவான் நம்பி வருகிறார், ஆனால் அது முட்டாள்தனமானது. ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகள் முழுவதுமாக மாறுபட்டது, டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே சில தனிப்பட்ட ஷாட்கள் உள்ளன அதனை ஷிகர் தவான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
தனது மோசமான ஆட்டம் குறித்து ஷிகர் தவான் கூறியதாவது
‘எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் நாம் தோல்வியடைந்ததால் கவலையும் ஏமாற்றமும் அடைந்திருப்பீர்கள். என்னுடைய தனிப்பட்ட செயல்பாட்டில் நான் தவறுகள் செய்துள்ளேன். அடுத்த போட்டியில் இதில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன். அன்பும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.