கொல்கத்தா கோர்ட் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், குற்றபத்திரிகையை பார்த்த பின்னர்தான் முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். முகமது ஷமி அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமை படுத்துகிறார் என ஹசின் ஜகான் கடந்த வருடம் கொல்கத்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் முகமது ஷமியும், அவரது சகோதரரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த நீதிபதி, அடுத்த முறை கோர்ட்டில் ஆஜராகாவிட்டால், கைது செய்து ஆஜர்படுத்தவும் என தெரிவித்தார்.
இதனால் பிசிசிஐ அவர் மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ நடத்தி வரும் அதிகாரிகளில் ஒருவர், குற்றபத்திரிகை கிடைக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘முகமது ஷமிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்தோம். ஆனால், உடனடியாக தற்போதே இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியதில்லை. நாங்கள் குற்றபத்திரிகையை பார்த்த பின்னர்தான், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுப்போம். தற்போது இந்த நேரத்தில் முடிவு எடுத்தால், மிகவும் முன்னதாக முடிவு எடுத்ததாக இருந்து விடும்’’ என்றார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், “நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிக்காக போராடுகிறேன் எனபதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதால் அனைவரையும் விட தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்று ஷமி நினைக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த ஷமி, தன்னை அவமானப்படுத்தவே இப்படி புகார் சொல்லப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார் என்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் ஷமி மீது குற்றம் சாட்டினார் ஜகான். மேலும் மாத செலவுக்கு 7 லட்ச ரூபாயும் கேட்டார்.
முகமது ஷமியும் ஹாசின் ஜகானும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.