சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் அதிரடியிலும் பிற்பாடு மோஹித் சர்மா, முஜிப் உர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அபார வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கெய்லைப் புகழ்ந்து பேசினார்.
கிறிஸ் கெய்ல் நேற்று மொஹாலி மைதானத்தை அலங்கரிக்கும் ஒளிவெள்ளத்துக்கு ஈடு செய்யும் சிக்சர் விளக்குகளை ஏற்றி 63 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் வீழ்த்த முடியாமல் 104 நாட் அவுட் என்று முடித்தார்.
பீல்டர்கள் பார்வையாளர்களாக, பார்வையாளர்கள் பீல்டர்களாயினர்: ஆர்ப்பாட்டமற்ற கெய்ல் அதிரடி சதத்தில் கிங்ஸ் லெவன் பிரமாத வெற்றி
ஆட்ட முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அஸ்வின் கூறியதாவது:
இது ஒரு முழுமையான வெற்றி. 10 ரன்கள் குறைவாகக் கொடுத்து நிகர ரன் விகிதம் குறித்து நாங்கள் பரிசீலித்திருக்கலாம். அது நடக்கவில்லை, இருந்தாலும் மகிழ்ச்சியே.
கிறிஸ் கெய்ல் அவர்களிடமிருந்து வெற்றியைப் பறித்து விட்டார். பவர் பிளேயில் நன்றாக ஆட வேண்டும்.
இன்று ரசிகர்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. மொஹாலியில் இப்படிப்பார்த்ததில்லை. கிறிஸ் கெய்ல் அவர்களுக்கு இன்று விருந்து படைத்தார். கெய்ல் இன்னிங்ஸை வர்ணிக்க ஒரு வார்த்தைப் போதாது. அவரது ஆட்டப்பாணியை யாரும் காப்பியடிக்க முடியாது, அது தனித்துவமான ஒரு பாணி.
அதுவும் அவருக்கு ஆட்டம் சூடுபிடித்தால் அதற்கு இணையான ஒன்றை யாரும் செய்ய முடியாது.
இவ்வாறு கூறினார் அஸ்வின்.