ஒரு போட்டியில் தோத்ததும் ஓவரா பேசுவானுங்க… அதுக்காக எல்லாம் மாத்திக்க முடியாது! டிக்ளேர் செய்ததில் எனக்கு கவலையே இல்லை – பென் ஸ்டோக்ஸ் கெத்து பேச்சு!

முதல் இன்னிங்ஸில் டிக்ளர் செய்தது குறித்து தோல்வியுற்றபின் கவலைப்படும் ஆள் நான் இல்லை. எங்களுடைய அணுகுமுறை தொடர்ந்து இதேபோல் தான் இருக்கும் என்று பேட்டியளித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது எதிர்பாராத விதமாக டிக்ளேர் செய்தது.

அதன் பிறகு முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 386 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தட்டுதடுமாறி 273 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஏழு ரன்கள் முன்னிலை பெற்றது உட்பட மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்த இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி தட்டுதடுமாறி வந்தது. கவாஜா அணியை தூக்கி நிறுத்தி 65 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கடைசியில் வந்த பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றி கனவை தகர்த்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், டிக்ளேர் செய்தது ஏன்? அது சரியான முடிவு தானா? என்பது குறித்து பேசியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது:

“போட்டியை கடைசி நாள் வரை எடுத்துச் செல்ல போராடியது, ஒட்டுமொத்தமாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதுபோன்ற போட்டிகள் கடைசிநாள் வரை எப்போது எந்த பக்கம் செல்லும் என்பதே தெரியாது. ஆகையால் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமே ஒரே நோக்கமாக இருக்க முடியும். இந்த போட்டி இல்லாமல் வேறு எந்த போட்டியை சீட்டின் நுனியில் அமர்ந்து ரசித்திருக்க முடியும். இதை ரசிக்கவில்லை என்றால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இது போன்ற போட்டிகளை கண்டு களிப்பதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் ஆஷஸ் தொடரை தவறாமல் பார்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

ஒவ்வொரு போட்டியிலும் அந்த சூழலுக்கு ஏற்ப என்ன தேவை என்பதை பொறுத்து முடிவுகள் எடுப்பேன். இந்த போட்டியின் சூழலில் டிக்ளர் செய்து, கூடுதல் சில ஓவர்கள் இருக்கின்றது அதில் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை எடுத்து சான்ஸ் பார்க்கலாம் என நினைத்தேன். ஒரு சில நேரங்களில் அது தவறக்கூடும் அதற்காக வருத்தப்படவில்லை. டிக்ளேர் செய்த முடிவுக்கு இப்போது வரை உறுதியாக நிற்கிறேன். இனிவரும் போட்டிகளிலும் எங்களது அணுகுமுறை இப்படித்தான் இருக்கும். அதில் மாற்றம் இருக்காது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்த விதம் அவர் எத்தகைய சீனியர் வீரர், இத்தனை வருடங்களாக டாப் இடத்தில் இருப்பது ஏன் என புரியும். மேலும் ராபின்சன் மற்றும் பிராட் இருவரும் நன்றாக அழுத்தம் கொடுத்தனர். கம்மின்ஸ் உறுதியாக எதிர்கொண்டு விளையாடிவிட்டார். ஆஸ்திரேலியாவிற்கு பாராட்டுக்கள். மீதம் இருக்கும் நான்கு போட்டிகளில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முற்படுவோம்.” என்றார்

Mohamed:

This website uses cookies.