மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் சம்பளம் பெறுவதில்லை: சச்சின் டெண்டுல்கர்!

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து எந்தவொரு நிதி ஆதாயமும் பெற்றுக் கொள்ளவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், வி.வி‌.எஸ்.லட்சுமணன், சவுரவ் கங்குலி ஆகியோர் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக உள்ளனர். இவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் ஆதரவு ஊழியராகவும் இருந்து வருவதாகவும், இது இரட்டைப் பணி என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து விளக்கும் அளிக்கும்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயின் தலைமையிலான குறை தீர்ப்பு அதிகாரி அலுவலகத்தில் இருந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு 14 அம்சங்களை எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். அதில் சேவை மனப்பான்மையுடன் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பணியாற்றுவதாகவும், அந்த அணியில் இருந்து எந்தவொரு நிதி ஆதாயமும் தாம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கிரிக்கெட் வீரராக தன் அனுபவத்தின் மூலம் கற்ற கிரிக்கெட் நுணுக்கங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வதாகவும் அதற்காக சம்பளம் எதையும் பெறுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் இது குறித்து தன் சட்டப்பிரதிநிதிகளுடன் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் சச்சின் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இருக்கும் உறவுகள் குறித்து பி.சி.சி.ஐ-க்கு ஏற்கெனவே நன்றாகத் தெரியும். இந்த ஐகான் பதவி என்பது மும்பை அணியின் நிர்வாகத்திலும், அணி மேலாண்மையிலும் தொடர்பில்லாத ஒன்று. அணி நிர்வாகம் எடுக்கும் எந்த முடிவிலும் என் தலையீடு இருந்ததில்லை. ஒரு வீரராக இதுவரை நான் கற்றுக்கொண்ட கிரிக்கெட் குறித்து நுணுக்கங்களை மட்டுமே வீரர்களிடம் பகிர்ந்துகொள்கிறேனே தவிர இதற்காக எந்த ஒரு நிதியையும் இதுவரை பெற்றதில்லை. இது முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செய்து வருகிறேன். பி.சி.சி.ஐ-யின் விதிகளை மீறி இரட்டை ஆதாய நிதிகளைப் பெற்றதில்லை.

அப்படி இருக்கையில், வீரர்கள் அமரும் இடத்தில் ஏன் அமர்கிறேன் எனக் கேட்பதெல்லாம் அபத்தமானது. இதுகுறித்து கூடுதல் விளக்கம் தேவைப்பட்டாலும், குறைதீர்ப்பாளர் ஜெயின் முன்னிலையில் சட்டப் பிரதிநிதிகளுடன் ஆஜராகி விளக்கம் தரத் தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.