சிஎஸ்கே அணிக்கு வருகிற சீசனில் மிக முக்கிய வீரராக இருக்கப்போகிறவர் இவர் தான் என்று தனது கணிப்பினை தெரிவித்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்தியூ ஹைடன்.
ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது. துவக்க நாளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. இந்த வருடம் சிஎஸ்கே அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை விட ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கூடுதல் பலத்துடன் இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டார். இது சிஎஸ்கே ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே அணியில் பலம்மிக்க ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் மொயின் அலி இருவரும் இருக்கின்றனர். இவர்களுடன் தலைசிறந்த ஆல்ரவுண்டர் இணைந்திருப்பது சிஎஸ்கே அணியை வலுப்படுத்துகிறது.
மேலும் சிவம் துபே, தீபக் சகர் ஆகியோரும் ஆல்ரவுண்டர் வரிசையில் இருப்பதால் என்பதால் ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணி இன்னும் பலத்துடன் காணப்படுகிறது.
இந்த வருடம் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என பலரும் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்தியூ ஹைடன், சிஎஸ்கே அணிக்கு யார் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று தனது கணிப்பில் கூறியுள்ளார்.
“பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தது கூடுதல் பலமாக தெரிகிறது. துவக்கத்தில் சில போட்டிகள் அவரால் பந்துவீச முடியவில்லை என்றாலும், அது பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஜடேஜா, மொயின் அலி, சிவம் தூபே ஆகியோர் அதை ஈடுசெய்வர். இந்த சீசனில் சிஎஸ்கே எக்ஸ்-பேக்டராக பென் ஸ்டோக்ஸ் திகழ்வார். தோனி அவரை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய களமிறக்குகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.” என்று ஹைடன் கூறினார்.