இந்திய அணியின் கவனத்தையே முற்றிலுமாக மாற்றி நம்பர். 1 இடத்திருக்கு கொண்டு வந்தவர் இவர்தான் என்று மிச்செல் ஜான்சன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு தனது 70வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி, அதன் பிறகு கிட்டத்தட்ட 1000 நாட்களுக்குப் பிறகுதான் தனது 71வது சதத்தை அடித்தார். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. தனது சிறந்த பார்மில் இல்லை என்பதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்லும் அளவிற்கு பலம்மிக்க அணியாக இருக்கும் இந்தியா, இவரது தலைமையில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததும் இவருக்கு பின்னாடைவாகவும் அழுத்தம் நிறைந்ததாகவும் மாறிவிட்டது.
அதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக தோல்வி அடைந்து வெளியேறியதால், விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது என பலரும் கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கு ஏற்றார்போல இவரும் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்.
தற்போது அணியில் எந்தவித பொறுப்பும் இன்றி இந்திய அணியில் விளையாடுகிறார். தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளான விராத் கோலி, ஆசிய கோப்பை தொடர் மூலம் தனது பழைய பார்மிற்கு திரும்பி உள்ளதாக வெளிக்காட்டி உள்ளார். ஆசிய கோப்பை தொடரில் 276 ரன்கள் அடித்த அவர், தனது 71 வது சதத்தையும் பூர்த்தி செய்து பெருத்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். இதனால் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“தனது அணியில் சிறந்த வீரர் மீண்டும் பழைய பார்மிற்கு வந்து நன்கு ரன் குவிப்பில் ஈடுபட்டால் அந்த அணிக்கு அசுர பலம் கிடைக்கும். அப்படி ஒரு அசுர பலத்தை இந்திய அணி தற்போது பெற்று இருக்கிறது. ஏனெனில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி பழைய பார்மிற்கு திரும்பி இருக்கிறார். குறிப்பாக டி20 உலக கோப்பைக்கு முன்பாக இது நிகழ்ந்திருப்பது மிகச்சிறந்த ஒன்று. விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி என்னை பொருத்தவரை மிகச் சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியின் முழு கவனத்தையே விராட் கோலி மாற்றி அமைத்தார். ஐபிஎல் போன்ற மிகப் பெரிய தொடரில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்ற அனுபவம் பெற்று வருவதால், மிகப் பெரிய தொடர்களை எந்தவித அழுத்தமும் இன்றி எதிர்கொள்கிறார்கள். ஏராளமான ரசிகர்கள் முன் விளையாடுவது பெரிய பலத்தை கொடுக்கிறது. அதன் எதிரொலி உலகக் கோப்பையிலும் இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.” என்றார்.