தற்பொழுது டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடிப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஐபிஎல் போட்டிகளில் குறிப்பாக கிறிஸ் கெயில், ரோஹித் ஷர்மா, டேவிட் வார்னர், அன்ட்ரூ ரசல் போன்ற அதிரடி வீரர்கள் விளையாடும் பொழுது நாம் அனைவரும் நிச்சயமாக அவர் சதம் அடித்து விடுவார் என்று நினைத்துக்கொண்டுதான் போட்டியை காண்போம். அந்த அளவுக்கு தற்போது மைதானங்கள் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு தகுந்தவாறு ஒத்துழைத்து வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் அடித்து இருக்கிறார். அதேபோல டி20 போட்டிகளில் அதிக பட்சமாக சர்வதேச அளவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் 172 ரன்கள் அடித்து இருக்கிறார். நீண்ட நாட்களாகவே சர்வதேச அளவில் டி20 போட்டியில் எந்த வீரர் முதல் முறையாக இரட்டை சதம் குவிக்கப் போகிறார் என்கிற விவாதம் இருந்து கொண்டே இருந்தது.
உள்ளூர் போட்டியில் சாதித்துக் காட்டிய இந்திய இளம் வீரர்
2007 ஆம் ஆண்டு இலங்கை அணியை சேர்ந்த தனுக்கா பதிரானா இங்கிலாந்தில் இந்த சாதனையை ஒரு உள்ளூர் போட்டியில் செய்திருந்தார். லேன்கேஷிரே சேடில்வொர்த் லீக் தொடரில் ஆஸ்டர்லேண்ட்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது இவர் இந்த சாதனையை செய்திருக்கிறார்.
இருப்பினும் இந்தியாவில் எந்த வீரர் முதல் முறையாக இந்த சாதனையை செய்யப்போகிறார் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே எழுந்து வந்தது. அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் வீரர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். முதல் முறையாக டி20 கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் தன் கவனத்திற்க்கு திருப்பியுள்ளார்.
17 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடித்து விளாசிய சுபோத் பாட்டி
சமீபத்தில் உள்ளூர் டி20 தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் டெல்லி அணியில் களமிறங்கிய ஓபனிங் வீரர் சுபோத் பாட்டி 29 பந்துகளில் 205 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இதில் 17 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 170 ரன்கள் ரன் ஓடாமல் பவுண்டரி மூலமாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது அதிரடி ஆட்டம் காரணமாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களமிறங்கிய சிம்பா அணி முடிந்தவரை போராடினாலும், இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சுபோத் பாட்டி டெல்லி அணிக்காக இதுவரை மொத்தமாக 8 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள், 24 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக இவர் 399 ரன்கள் குவித்திருக்கிறார். ஆல்ரவுண்டர் வீரரான இவர் மிக சிறப்பாக பந்து வீசி இந்த அனைத்துப் போட்டிகளிலும் மொத்தமாக 103 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.