இவர் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பி விடுவார் என்று இளம் வீரரை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் புகழ்ந்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி வருகிற டிசம்பர் 26ம் தேதி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக 16ஆம் தேதி தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகையால் இம்முறை வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்று வீரர்கள் தீவிரமாக திட்டங்களை வகுத்து பயிர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் சிறப்பாக யார் செயல்படுவார்?, வெற்றி எந்த அணியின் பக்கம் அதிகமாக இருக்கும்? என்று முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு புகழாரம் சூட்டி, எப்படி செயல்படுவார்? என தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
“இந்திய வீரர்கள் குறிப்பாக, பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டு மைதானங்களில் ரன்கள் குவிப்பதற்கு மிகவும் திணறி வருகின்றனர். இந்திய அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்கள் சரியான விகிதத்தில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது இடத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்கள். இம்முறை ரிஷப் பண்ட் மிகவும் பயங்கரமாக வீரராகக் காணப்படுகிறார். ஒரு மணிநேரத்தில் ஆட்டத்தையே மாற்றக் கூடியவர். இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் மாற்றிவிட்டார்.
கடந்த முறை தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் மிகவும் திணறினர். இம்முறை அப்படி இருக்காது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் கே எல் ராகுல், புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோர் நல்ல பார்மில் இருக்கின்றனர்.” என தெரிவித்தார்.