எல்லாரும் விராட் கோலி, முகமது ஷமி பத்தி தான் பேசுறீங்க… ஆனா உண்மையான ஹீரோ இவர் தான்; முன்னாள் இங்கிலாந்து வீரர் அதிரடி பேச்சு !!

எல்லாரும் விராட் கோலி, முகமது ஷமி பத்தி தான் பேசுறீங்க… ஆனா உண்மையான ஹீரோ இவர் தான்; முன்னாள் இங்கிலாந்து வீரர் அதிரடி பேச்சு

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளதற்கு கேப்டன் ரோஹித் சர்மா தான் முக்கிய காரணம் என முன்னாள் இங்கிலாந்து வீரரான நாசிர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது.

இதன்பின் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் 7 வீரர்கள் முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 327 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரரான நாசிர் ஹூசைன், இந்திய அணியின் உண்மையான ஹீரோ ரோஹித் சர்மா தான் என பாராட்டியுள்ளார்.

இது குறித்து நாசிர் ஹூசைன் பேசுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த வெற்றி அபாரமானது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முகமது ஷமி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் தான் காரணம் என்று தலைப்பு செய்திகளில் எழுதப்படும், ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் உண்மையான ஹீரோ ரோஹித்  சர்மா. ரோஹித் சர்மா இந்திய அணியை முழுவதுமாக மாற்றியுள்ளார். கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த போது, ஒட்டுமொத்தமாக இந்திய அணியை முழுவதுமாக மாற்றியாக வேண்டும் என ரோஹித் சர்மா, திணேஷ் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். சொன்னது மட்டும் இல்லாமல் ரோஹித் சர்மா தற்போது அனைத்தையும் மாற்றியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா பயம் இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரமான துவக்கத்தை அமைத்து கொடுத்தது மற்ற வீரர்களுக்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. என்னை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.