இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி மெல்லமெல்ல வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதிசெய்யும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடயே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களும் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 571 ரன்களும் அடித்தது.
91 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி பலமாக இருந்தாலும், இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. வெற்றி பெற்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடலாம். ஒருவேளை டிரா செய்தால் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெற்றி சதவீதம் அடிப்படையில் இது போதாது.
நடைபெற்று வரும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதிபெற முடியுமா? இல்லையா? என்பது உறுதியாகும்.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. தற்போது முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆட்டம் ஐந்தாம் நாளில் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 285 அடித்தால் வெற்றி என்ற முனைப்பில் நியூசிலாந்து அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தில் செஸ் செய்து விளையாடி வருகிறது.
இதுவரை 55 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்திருக்கிறது. போட்டியில் இன்னும் 15 ஓவர்கள் மட்டுமே மீதம் இருக்க நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 101 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் டெரல் மிட்ச்சல் மற்றும் வில்லியம்சன் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இருவரும் தற்போது ரன் குவிக்கும் வேகத்தில் இருக்கின்றனர். ஆகையால் மெல்லமெல்ல வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்றாலும் அது கவலை இல்லை. நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். இந்திய அணி பைனலுக்குள் செல்வதற்கு குறைந்தபட்சம் டிரா செய்தாலே போதுமானது.