நியூசிலாந்து இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் சிஎஸ்கே வீரரின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கிறது.
நியூசிலாந்துக்கு சென்று டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இலங்கை அணி விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்துவிட்டன. தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி, ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு அசலங்கா 67 ரன்கள், குஷால் பெராரா 53 ரன்கள் அடித்து இலங்கைக்கு பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார்.
குஷால் மெண்டிஸ் 25 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, கடைசியில் வந்த ஹசரங்கா வெறும் 11 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இலங்கை அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் அடித்தது.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டேரல் மிச்சல் 66 ரன்கள், டாம் லேத்தம் 27 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். பின்னர் உள்ளே வந்த சாப்மன் சிறப்பாக விளையாடி 33 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கடைசியில் ஜிம்மி நீசம் 10 பந்துகளில் 19 ரன்கள், ரவீந்திரா 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்து 197 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு உதவினர்.
கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தேவை 12 ரன்கள், 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் இலங்கை பந்துவீச்சாளர் சனக்கா. கடைசி பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டபோது, இஸ் சோதி ஒரு சிக்ஸர் அடித்து போட்டியை சமன் செய்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு நகர்த்தப்பட்டது.
சூப்பர் ஓவரில் இலங்கை அணி முதலில் பந்துவீசியது. யாரும் எதிர்பாராத வகையில் ஸ்பின்னருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சிஎஸ்கே வீரர் மகீஷ் தீக்ஷனா பவுலிங் செய்தார். நியூசிலாந்து அணிக்கு நீசம் மற்றும் டேரல் மிச்சல் இருவரும் களமிறங்கினர். மூன்றாவது பந்தில் நீசம் விக்கட்டை தூக்கினார் தீக்ஷனா. அதற்கு அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி கொடுத்தாலும், கடைசி பந்தில் சாப்மன் விக்கெட்டை எடுத்தார்.
பரபரப்பாக சென்ற சூப்பர் ஓவரில் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியை கதிகலங்க வைத்தார் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் மஹீஸ் தீக்ஷனா.
இலங்கை அணி 9 ரன்கள் இலக்கை செஸ் செய்ய களமிறங்கியது. அசலங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் இருவரும் பேட்டிங் செய்தனர். குஷால் ஸ்ட்ரைக் எடுத்துக்கொண்டு ஒரு ரன் அடித்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட அசலங்கா சிக்சர் அடித்தார்.
இலங்கை அணியின் வெற்றிக்கு இப்போது 4 பந்தில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மூன்றாவது பந்தில் ஒயிட் மூலம் பவுண்டரிக்கு சென்றதால், இலங்கை அணி 2 பந்திலேயே வெற்றியை பெற்றது. பேட்டிங்கில் 67 ரன்கள் மற்றும் சூப்பர் ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அசலங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.