போட்டியின் கடைசி பந்தில் இலங்கை அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 355 ரன்கள் அடித்து வலுவான நிலையைப் பெற்றது.
அதன் பிறகு முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் மிகவும் தடுமாறியது. பின்னர் டேரல் மிச்சல் மற்றும் மேட் ஹென்றி இருவரின் அபாரமான ஆட்டத்தினால் முன்னிலை பெற்றது. இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 18 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு மூத்த வீரர் ஆங்கிலோ மேதியூஸ் சதம் அடித்து அசத்தினார். அபாரமாக விளையாடி 302 ரன்கள் அடித்தது இலங்கை அணி. இதன் மூலம் 284 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு இருந்தது. அதற்கு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையும் இருந்தது.
இதனால் மீதமிருக்கும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை ஆல் அவுட் செய்யும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கியது. 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை செஸ் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் நான்காவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த டேரல் மிட்ச்சல் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார்.
இந்த ஜோடி 145 ரன்கள் சேர்த்தது. துரதிஷ்டவசமாக டேரல் மிட்ச்சல் 81 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேன் வில்லியம்சன் ஆட்டத்தை எடுத்துச் சென்றார். இவருக்கு மறுமுனையில் வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழந்து வந்ததால், இலங்கை அணிக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது.
சதமடித்து களத்தில் நின்று கொண்டிருந்தார் கேன் வில்லியம்சன். நாளின் கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. அதே நேரம் இலங்கை வெற்றி பெற இரண்டு விக்கெட் தேவைப்பட்டது.
கேன் வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடிக்க, ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. இறுதியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் நேரடியாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. வெற்றி சதவீதம் அடிப்படையில் இலங்கை அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.