இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான தினம் இன்று; வீடியோ உள்ளே
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தனது 100வது சர்வதேச சதத்தை அடித்த தினம் மார்ச் 16.
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் சச்சின் டெண்டுல்கர். அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர்.
24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களையும் 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18,426 ரன்களையும் என மொத்தமாக 34,357 ரன்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார்.
அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் என மொத்தம் 100 சதங்களை அடித்த சாதனை நாயகனாக திகழ்கிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை குவித்துள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதை முறியடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். இதுவரை சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் தான் பேட்டிங்கில் மாபெரும் சாதனையாக உள்ளது.
அப்பேர்ப்பட்ட மிகச்சிறந்த சாதனையை சச்சின் படைத்த தினம் இன்று. ஆம்.. தனது 100வது சர்வதேச சதத்தை 8 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தான் அடித்தார் சச்சின் டெண்டுல்கர்.
2012 ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி இதே மார்ச் 16ம் தேதி தான் நடந்தது. அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்தில்114 ரன்களை குவித்தார். அதுதான் சச்சினின் 100வது சர்வதேச சதம். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 289 ரன்களை அடித்தது. ஆனால் 290 ரன்கள் என்ற இலக்கை அடித்து வங்கதேச அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது.