இன்று – இந்திய கிரிக்கெட்டின் துவக்கம்…. காமெடியாக சென்று லார்ட்சில் உலகக்கோப்பை வென்ற கபில்தேவ் கூட்டம்!!

யாராலும் எளிதில் வீழ்த்தமுடியாத மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தன் முதல் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றெடுத்த நாள் இன்று. 

2011-ம் ஆண்டு உலககோப்பையை எளிதாக எப்படி மறக்கமுடியாதோ அதேபோன்றுதான் 1983ம் ஆண்டு உலகக்கோப்பை.  ஆனால் இரண்டுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது. வகுப்பில் தொடர்ந்து நல்ல மதிப்பெண்ணைஎடுத்துவரும் மாணவன் நிச்சயமாக முதலிடத்தை பிடிப்பது போன்றதுதான் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை.

தோனி தலைமையிலான இந்திய அணி சேவாக், சச்சின், விராட், யுவராஜ் சிங் என பலம்வாய்ந்த வீரர்கள் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் போட்டி இந்தியாவிலேயே நடந்தது மிகப்பெரிய சாதகம். ஏற்கெனவே டி-20 கோப்பையை வென்று ‘ஒரு கிரிக்கெட் அணி’ என்ற முறையில் ஓரளவு தன்னிறைவு அடைந்திருந்தது.

ஆனால், 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வித்தியாசமானது. ‘லகான்’  திரைப்படத்தில் இறுதிப்போட்டியில் வெல்லவே வெல்லாது என்று நினைத்த அமீர்கான் அணி கடைசியில் வென்று ஒர் மேஜிக்கை நிகழ்த்துமே அதுதான் 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை. அதற்குச் சரியான காரணங்களும் உண்டு.

1983-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகள் விளையாடின. அதுமட்டுமல்லாமல் 1975-ம் ஆண்டு மற்றும் 1979-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி பெரிதாக எந்த வெற்றியும் ஈட்டவில்லை. மேலும் அப்போது உள்நாட்டிலேயே இந்திய கிரிக்கெட் அணிக்கு இப்போது உள்ளது போல் பெரிய ஆதரவு இல்லை.

கேட்ச் பிடித்த கபில் தேவை பாராட்டும் அணியினர்…

1983-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் விளையாடிய சந்திப் பாட்டில் ‘தி குவிண்ட்’ ஆங்கிலச் செய்தித்தளத்திற்கு அளித்த பேட்டியில் “உண்மையில் 1983 உலக்கோப்பை விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு புறப்படும்போது, அணியில் இடம்பெற்றிருந்த நாங்களே கோப்பையை வெல்வோம் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறுகிறார். இதில்ஆச்சரியப்படுவதற்கும் எதுவும் இல்லை. ஏன் என்றால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் மைக்கல் ஹோல்டிங், கோட்னி வால்ஸ், ஆஸ்திரேலிய அணியின் டென்னிஸ் லில்லி போன்றவர்கள் தங்களுடைய வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களின் விலா எலும்புகளைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது.

அவர்களின் பந்து வீச்சுகளை எதிர் கொள்ள எல்லோரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் ‘அண்டர் டாக்’-ஆக கருதப்பட்ட இந்திய அணி ஒவ்வொரு சுற்றாக முன்னேறி அறை இறுதி சுற்றை அடைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருந்த இந்திய அணியை ‘கோமாளிகளின் கூட்டம்’ என்று இங்கிலாந்தின் செய்தி ஊடகங்கள் தலையங்கம் தீட்டின. இவை எல்லாவற்றையும் மீறி இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வி வி என் ரிச்சர்ட்ஸ்

இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. கிளைவ் லாய்ட் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி ஏற்கனவே இரு உலகக்கோப்பைகளை வென்று பலமான நிலையில் இருந்தது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இன்றும் போற்றப்படும் வி.வி.என்.ரிச்சர்ட்ஸ் போன்றோர்கள் இடம் பெற்றிருந்த அணியாக மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இருந்தது.

விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஸ்ரீகாந்த்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி 183 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. மிக எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் அடுத்தெடுத்துச் சரிந்தன. மொஹிந்தர் அமர்நாத் மற்றும் மதன்லால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

மேலும் 1983 உலகக்கோப்பை தொடரில்அதிக விக்கெட்டுகளை இந்தியாவின் ரோஜர் பின்னி எடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் அடித்த 175 ரன்கள் அந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.

கபில் தேவ்

அடுத்து வரவுள்ள 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையும் இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. அப்போது இருந்த அணியை விடப் பல மடங்கு பலம் வாய்ந்த விராட் கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் மீண்டும் சாதனை படைக்குமா? மீண்டும் அந்த மேஜிக் நிகழுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editor:

This website uses cookies.