நான் அடிச்ச 5 சதத்துல இதுதான் என்னோட ஃபேவரட்! உலகக்கோப்பை சம்பவத்தை நினைவுக்கூறிய ரோகித் சர்மா!
2019 உலகக்கோப்பை தொடரில் நான் அடித்த 5 சதங்களில் இந்த ஒன்று தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என மனம் திறந்து பேசியுள்ளார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா. கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் துவக்க வீரராக களம் இறக்கப்பட்ட பிறகு, இவரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை. வரிசையாக சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள் என அடித்து சாதனைகளை புரிவது மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இவரது பேட்டிங்கை பறைசாற்றும் தொடராக அமைந்தது. அந்த குறிப்பிட்ட உலக கோப்பை தொடரில் வரலாறு காணாத அளவில் 5 சதம் விளாசினார். அதில் ஒன்றாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 140 அடித்தது பிரபலமாக பேசப்பட்டது.
இந்த தொடரில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 648 ரன்கள் அடித்திருந்தார். குறிப்பாக தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசினார்.
இந்த ஐந்து சதங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான சதம் எது என்பதை சமீபத்திய நேரலையில் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.
ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா நேரலையில் கூறியதாவது, “உலக கோப்பை தொடரில் நான் அடித்த சதங்களில் எனக்கு மிகவும் பிடித்தது. முதல் போட்டியான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அடித்த சதம் தான்.” என்றார்.
அப்போட்டியில் ரபாடா, தாகூர் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை தங்களது பந்துவீச்சால் மிரட்டினர். இருப்பினும் இப்போட்டியில் ரோஹித் சர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் என்ற இலக்கை கடந்து அபாரமாக வெற்றியைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.