என் வாழ்நாளில் சோகமான நாள் அது; இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத அந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கூறிய ஜடேஜா!
ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த உலக கோப்பை அரையிறுதி சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணி எவ்வாறு வெளியேறியது என இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது வரை மறக்க இயலாது.
உலகக்கோப்பையை எளிதாக வெல்லக்கூடிய பலம்மிக்க அணியாக இந்திய அணி அந்த தொடரில் களமிறங்கியது. அதற்கு ஏற்றார்போல லீக் போட்டிகளில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இந்திய அணிக்கு முன்னாள் கத்துக்குட்டி அணியான பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியை அரையிறுதியில் இந்தியா எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. பலமான பேட்டிங் ஆர்டர் கொண்ட இந்திய அணிக்கு இது ஒரு இலக்கே இல்லை என பார்க்கப்பட்ட போது, பவுலிங்கில் அசத்திய நியூசிலாந்து வீரர்கள் 92 ரன்களுக்கு இந்திய வீரர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அனைவரையும் வீழ்த்தி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அடுத்ததாக முன்னாள் கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 54 பந்துகளில் 77 ரன்கள் விளாசி இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தார். இருவரும் களத்தில் இருக்கையில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. தவறுதலாக ஷாட் ஆடி ஜடேஜா ஆட்டமிழந்தார்.
இருப்பினும், நம்பிக்கை நாயகனாக தோனி இருக்கிறார்; அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என பலரும் நம்பினர். துரதிஸ்டவசமாக அடுத்து சில ஓவர்களில் அவரும் ரன் அவுட் ஆக, இந்திய அணியின் மூன்றாவது உலக கோப்பை கனவு சுக்குநூறானது.
அந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு, தோனி இந்திய அணிக்கு தற்போது வரை ஆடவில்லை. இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இதனை நினைவு கூர்ந்து பேசிய ஜடேஜா கூறுகையில், “நாம் நமது சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முயற்சிப்போம். ஆனால் ஒரு சில சமயம் அதனை முழுமையாக அடு தவறிவிடுவோம். என் வாழ்நாளின் சோகமான நாள் அது.” என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் ஜடேஜா.