சச்சின், கம்பீர் இல்லை; தோனி படை உலகக்கோப்பையை வென்றதற்கு இவர் தான் முக்கிய காரணம்; சங்ககாரா சொல்கிறார்
முன்னாள் கேப்டன் கங்குலியின் கடின உழைப்பே தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கு மிக முக்கிய காரணம் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஹீரோவாக இருந்த தோனி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரனாக மாறியது கடந்த 2011ம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தான் என்றால் அது மிகையல்ல. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை எதிர்த்து ஆடியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 103 ரன்களையும், சங்ககாரா 48 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இதனையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக் (0), சச்சின் (18) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். மூன்றாவது வீரரான கம்பீர் 97 ரன்கள் எடுத்து கொடுத்து இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார்.
தன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் யுவராஜ் சிங் இறங்க வேண்டிய ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய தோனி போட்டியின் தன்மைக்கு ஏற்ப ரன்களை குவித்ததோடு மட்டுமல்லாமல் மிரட்டலான ஒரு சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து இந்திய அணியின் மிகப்பெரும் கனவான உலகக்கோப்பையும் வென்று கொடுத்தார். இந்த போட்டியில் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி சிக்ஸரை அடித்து விட்டு ஆர்பரிக்காமல் தோனி கூலாக தனது பேட்டை சுழற்றிய காட்சியை இன்று வரை எந்த ஒரு இந்திய ரசிகனும் மறந்திருக்க முடியாது.
இந்தநிலையில், தோனி படை உலகக்கோப்பையை வென்றதற்கு, தோனிக்கு முன்னாள் கேப்டனாக இருந்த கங்குலியின் கடின உழைப்பே மிக முக்கிய காரணம் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்ககாரா கூறியதாவது;
இந்திய அணி இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு முதன்மையான காரணம் குங்குலி தான். தோனி தலைசிறந்த கேப்டன் தான். இந்திய அணி கோப்பைகளை குவிக்க காரணம் அவர்தான். ஆனால், இதற்கெல்லாம் விதையாக இருந்தவர் சவுரவ் கங்குலி தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று குமார சங்ககாரா தெரிவித்துள்ளார்.