மோசமான பவுலிங் இல்லை… தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்; கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வேதனை
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு மோசமான பீல்டிங்கும் மிக முக்கிய காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் தனது முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து பெரும் பின்னடைவை சந்தித்தது.
மொய்ன் அலி மற்றும் டேரியல் மிட்செல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கொடுத்தாலும், துவக்கம் சரியாக அமையாததாலும், மோஹித் சர்மா உள்ளிட்ட குஜராத் வீரர்கள் கடைசி ஓவர்களை கச்சிதமாக வீசியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.
இந்தநிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட், மோசமான பீல்டிங் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், “பீல்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டது எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. மோசமான பீல்டிங்கின் மூலம் நாங்கள் 10 முதல் 15 ரன்களை வழங்கிவிட்டோம். இந்த போட்டியில் எங்களது திட்டங்களை சரியாகவே செயல்படுத்தினோம், ஆனால் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டனர். சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அடித்த சில ஷாட்கள் மிக சிறப்பானது. ஒரு பேட்ஸ்மேன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிக கடின. மிக விரைவாகவே நாங்கள் அடுத்த போட்டியில் விளையாட உள்ளதால் இங்கிருந்து சென்னை சென்றுவிட்டு அடுத்த போட்டிக்காக எங்களை முழுமையாக தயார்படுத்தி கொள்வோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.