இந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்கு துவக்க வீரரும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டைனாகவும் இருந்து வரும் ரோஹித் ஷர்மா, இன்று அவரது 32-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2007-ம் ஆண்டு, அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமான ரோஹித் ஷர்மா, இந்திய அணிக்காக இதுவரை 206 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் இதுவரை எவரும் நிகழ்த்திராத சாதனையாக ஒருநாள் போட்டிகளில 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். அதேபோல் 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதிலும் இவரே முதலிடம்.
ஒரு நாள் போட்டிகளில் இவர் இதுவரை8010 ரன்கள் எடுத்திருக்கும் ரோஹித், 22 சதம், 41 அரை சதங்களையும் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில், 267 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தார். ஒரு நாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸில், தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது. 2013-ம் ஆண்டு முதல், ஷிகர் தவானுடன் சேர்ந்து இந்திய அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கினார். இதுவரை 101 இன்னிங்ஸில் ஓப்பனிங் களமிறங்கியுள்ள இந்த இணை, 4,541 ரன்கள் சேர்த்துள்ளனர். “கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியிலும் இந்த பார்ட்னர்ஷிப் என்றென்றும் தொடரும்” என்று பார்ட்னர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக முறை இரட்டைச் சதம் அடித்தவர், ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ஒரு நாள், டி20 கிரிக்கெட் போட்டிகளின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித் ஷர்மா, ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மே 30-ம் தேதி தொடங்க இருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.