இந்திய மைதானம் எங்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த வருடம் உலககோப்பையை நாங்கள் வெல்வதற்கு நல்ல சான்ஸ் கிடைத்திருக்கிறது என ஜோ ரூட் பேசியுள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை இந்தியாவில் நடத்தப்பட உள்ளதால், இதற்காக பல அணிகளும் இந்திய மைதானங்களின் கண்டிஷன் பொறுத்து பல திட்டங்களை வகுத்து வருகின்றன.
இந்திய அணி, இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் இருந்து உலகக்கோப்பை நோக்கிய தங்களது பயணத்தை துவங்கிவிட்டனர். 3-0 என இலங்கை தொடரை கைப்பற்றினர். நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளனர். அடுத்ததாக ஆஸி., அணி இந்தியாவிற்கு வந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 12 வருடங்களாக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வருகிறது.
2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் அரையிறுதி போட்டி வரை சென்று தோல்வியடைந்து வெளியேறி ஏமாற்றியது. அந்த ஏமாற்றம் இம்முறை நிகழ்ந்து விடக்கூடாது என்று பல திட்டங்களை பிசிசிஐ வகுத்து வருகிறது.
“இம்முறை 50-ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால், உலகக்கோப்பையை வென்று நாங்கள் தக்கவைப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏனெனில் இங்கிலாந்து அணியில் இருக்கும் வீரர்கள் நிறைய போட்டிகளை இந்திய மைதானங்களில் விளையாடிய அனுபவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொள்கிறார்கள். ஆகையால் 50-ஓவர் உலகக்கோப்பையை வெல்வதற்கு நல்ல சான்ஸ் என்று நினைக்கிறேன்.
உலகக்கோப்பைக்கு முன்னர் இந்திய அணியுடன் எங்களுக்கு ஒருநாள் தொடர் இருக்கிறது. அதை பொறுத்து திட்டங்கள் வகுப்போம். காம்பினேஷன்ஸ் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்வோம்.” என்றார்.