2007 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததும் நான் நானாகவே இல்லை ; மனம் திறந்து பேசிய சேவாக்..
2007 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிதான் உலகின் மிகச் சிறந்த அணியாக இருந்தது,அப்படியிருந்தும் தோல்வி அடைந்தோம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்திய மைதானத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் உலகக்கோப்பை தொடர் குறித்தான சுவாரசியமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய அணிக்காக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிய பெரும்பாலான முன்னாள் வீரர்கள் தங்களுடைய அனுபவத்தை செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக இளம் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
உலகின் தலைசிறந்த அணி தோல்வியை தழுவியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..
அந்த வகையில் இந்திய அணியில் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் 2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய அணிக்கு நேர்ந்த அனுபவத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் தெரிவிக்கையில்.,“2007 உலக கோப்பை தொடர் என்னை மிகவும் காயப்படுத்தியது, 2007 இல் எங்களுடைய அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது. எங்களுடைய அணியை தவிர்த்து வேறு எந்த அணியும் மிகச்சிறந்தது என்று அப்பொழுது கூறி விட முடியாது. 2003 2007 என அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நாங்கள் 2011 இல் உலகக் கோப்பையை வென்றோம். குறிப்பாக 2007 உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த நாங்கள் பெர்முடா அணிக்கு எதிராக மட்டுமே ஒரு வெற்றி புள்ளியை பெற்றோம்”.
“நாங்கள் அனைவருமே அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விடுவோம் என்று நினைத்த பொழுது நாங்கள் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை இழந்து விட்டோம் .இதனால் நாங்கள் தொடர் நடைபெற்ற டிரினிடாட் மற்றும் டொபாகோவில் எந்த ஒரு பயிற்சியும் செய்யாமல் ஹோட்டலிலேயே தங்கினோம். அப்பொழுது நான் என்னுடைய அறை விட்டு வெளியேறவில்லை இன்னும் சொல்லப்போனால் ரூம் சர்வீஸ் ஹவுஸ்கீப்பிங் என எதையும் கேட்கவில்லை. அங்கிருந்த என்னுடைய உறவினர்களின் உதவியுடன் பின்பு வெளியேறினேன்” என 2007 உலக கோப்பை தொடரை தோல்வி அடைந்த பின்பு தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை சேவாக் மனம் திறந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.