பாக்., அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கண்டால் நடுங்குகிறார்கள்; முன்னாள் வீரர் ஆவேச பேச்சு!
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கண்டு மிகவும் பயப்படுகிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் அணியின் முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை 200 ரன்களில் சுருட்டி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆனால் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி சுருண்டது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை கட்டுக்குள் கொண்டுவந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி பெறும் தருவாயில் இருந்த பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. முதல் இன்னிங்சில் ஆக்ரோஷமாக ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் அதை செய்யத் தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “இயல்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினால் இங்கிலாந்து மைதானங்களில் ரன்களை எடுக்கலாம். ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கண்டு பாக்., பேட்ஸ்மேன்கள் சற்று பயப்படுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் காலை முன்னோக்கி வைத்து சாட்டுகள் அடித்தால் எளிதில் பவுண்டரிக்கு செல்லும். ஆனால் பயத்தில் ஆடும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிகமுறை காலை பின்னோக்கி வைத்து விக்கெட்டை இழந்து விடுகிறார்கள்.
தடுப்பு அணுகு முறையை கைவிட்டுவிட்டு ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்து மைதானங்களில் வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இங்கிலாந்து மைதானங்களில் ரன் குவிக்க இயலும். இரண்டாவது டெஸ்டில் பாக்., பேட்ஸ்மேன்கள் அதே தவறை செய்கிறார்கள். மழை காரணமாக ஏதோ தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.