பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது முதலில் உள்நாட்டுப் போட்டியில் நன்றாக விளையாடி பயிற்சி பெறட்டும். அதன்பின் சர்வதேச அணிக்குச் செல்லலாம் என்று பாகி்ஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளாசியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சர்பிராஸ் அகமது உலகக் கோப்பை போட்டியில் மோசமாக அணியை வழிநடத்தியதால் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், டி20 அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பிராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் ஆசம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடருக்கு முறையே கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
இதனால் மிகுந்த அதிருப்தியில் இருந்த சர்பிராஸ் அகமது விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானிடம், சர்பிராஸ் அகமது அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பிரதமர் இம்ரான் கான் காட்டமாக பதில் அளிக்கையில், “சர்பிராஸ் அகமது விளையாட்டு பெரிய அளவுக்குச் சிறப்பாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரரின் ஃபார்ம் என்பதை டி20 போட்டியில் வைத்து மட்டும் கணிக்கக்கூடாது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் மூலமாகவும் கணிக்க வேண்டும்.
ஆதலால், சர்பிராஸ் அகமது முதலில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி நன்றாகப் பயிற்சி பெறட்டும். அதில் கவனம் செலுத்தட்டும். அதன்பின் சர்வதேசப் போட்டிகளில் விளையாடட்டும்.
மிஸ்பா உல்ஹக்கை பயிற்சியாளராகவும், தேர்வுக்குழுத் தலைவராகவும் நியமித்தது சிறந்த நடவடிக்கை. ஆக்கபூர்வமானது. மிஸ்பா மிகவும் நேர்மையானவர். யாருக்கும் சார்பாக நடவடிக்கை எடுக்காதவர். அதிகமான அனுபவம் உடையவர்.
சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணி சிறப்பாக முன்னேற்றம் அடைய மிஸ்பாவின் பயிற்சி உதவும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி சிறப்பாக வரும். வீரர்களை நன்றாக வளர்த்து, திறமையை மெருகேற்றும் தகுதி மிஸ்பாவுக்கு இருக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட்டும் சிறப்பாக முன்னேறும்” எனத் தெரிவித்தார்.