பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
உலகக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது. ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் படுதோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
ஆனால் பலத்துடன் இருக்கும் இங்கிலாந்து அணி சொந்த மண் என்பதால் இந்தப் போட்டியை எளிதில் வெல்லலாம் என்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே அந்த அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத மார்க் வுட் இந்தப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்த முறையும் வேகப்பந்து வீச்சாளர் டாம் குரானுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்த ஆட்டம் உலக சாதனை நிகழ்த்தப்பட்ட பிட்ச்சில் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்தது இந்த ஆடுகளத்தில்தான். அந்த போட்டியில் ஹேல்ஸ், பேர்ஸ்டோ சதம் அடித்தார்கள். 2016-ம் ஆண்டில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இதே பிட்ச்தான் பயன்படுத்தப்பட்டது. இதே பிட்ச்சில்தான் 2016-ல் இங்கிலாந்து 444/3 விளாசியது நினைவிருக்கலாம்.
அன்று பாகிஸ்தானை மே.இ.தீவுகள் பவுன்ஸ் அவுட் செய்து 105 ரன்களுக்குச் சுருட்டிய பிட்ச்சிற்கு 2 பிட்ச்கள் தள்ளியிருக்கும் பிட்ச்சை இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டிக்குப் பயன் படுத்தி ரசிகர்களைக் குஷிப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
ட்ரெண்ட்ப்ரிட்ஜில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திய இமாம் உல் ஹக், ஃபகர் ஸமன் ஜோடி முறையே 44, 36 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 63, அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 84 மற்றும் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மார்க் உட் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.