142/2 டூ 202 ஆல்-அவுட்.. பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து பவுலர்கள்!

பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியது இங்கிலாந்து அணி.

முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி.

முதல் டெஸ்ட் போட்டியை போல அதிரடியை வெளிப்படுத்திய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த முயற்சித்தனர். ஆனால் இம்முறை பாகிஸ்தான் பவுலர்கள் சுதாரித்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்.

இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பென் டக்கட் 63 ரன்களும், ஆலி போப் 60 ரன்களும் அடித்து அவுட்டாகினர். முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது

பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது டெஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக துவங்கியது. முதல் நாள் முடிவில் 107 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் பாபர் அசாம் மற்றும் சவுத் சக்கீல் இருவரும் இருந்தனர்.

இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் அரை சதம் கடந்து 75 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டம் இழந்தார். நன்றாக விளையாடி வந்த சவுத் சக்கீல் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 10 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பாகிஸ்தான் அணி தடுமாறியது. அஷ்ரப் 22 ரன்களுக்கும், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கும் அவுட் ஆகினர்.

ஒரு கட்டத்தில் 142 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் இங்கிலாந்து பவுலர்களின் தாக்குதலால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து மொத்தமாக 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 79 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கின்றது.

ஜாக் லீச் 4 விக்கெட்டுகள், மார்க் அவுட் 2 விக்கெட்டுகள், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் நாள் முடிவில் வலுவான இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாளில் இப்படி 202 ரன்களுக்குள் சுருண்டதால் தற்போது பெருத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. உணவு இடைவேளை முடிந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிசை துவங்கியிருக்கிறது.

Mohamed:

This website uses cookies.