கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் இங்கிலாந்து அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் தடை விதித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் உடன் இருந்தால் கவனம் சிதறலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் அவர்கள் தங்க வைத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கான செலவு உள்ளிட்ட விஷயங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் இருதரப்பு போட்டிகள் நடக்கும்போது, பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஹரிஸ் சோகைலுக்கு மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக, தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல, சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தலா 2 பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இன்று பிரிஸ்டலில் நடைபெறும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கார்டிப்பில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.