இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் மீண்டும் மழை குறுக்கீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது.
337 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் தனது 3-வது ஓவரை வீசும் போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அந்த ஓவரின் மீதமுள்ள பந்துகளை வீச விஜய் சங்கரை அழைத்தார் கோலி. அது பலனளிக்கும் வகையில் முதல் பந்திலேயே இமாம் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் விஜய் சங்கர்.
இதையடுத்து, ஃபகார் ஜமான் மற்றும் பாபர் அஸாம் இன்னிங்ஸை கட்டமைத்து விளையாடினர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்து விளையாடி வந்தனர். இதில், ஸமான் முதலில் அரைசதம் அடித்தார். இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து விளையாடி வந்தது.
இந்த நிலையில், ரன் வேகத்தை உயர்த்தும் நோக்கத்தில் இருவரும் சற்று துரிதமாக ரன் சேர்க்க தொடங்கினர். ஆனால், குல்தீப் யாதவ் மாற்று திட்டத்தை வைத்திருந்தார். தனது அற்புதமான பந்துவீச்சால் முதலில் பாபர் அஸாமை போல்டாக்கினார் குல்தீப். அஸாம் 48 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே ஸமான் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் குல்தீப். ஸமான் 62 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹபீஸ் (9), மாலிக் (0) சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்த பாண்டியா ஓவரில் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்து இருவரும் ஏமாற்றம் அளித்தனர். இதனால், அந்த அணி 12 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் விக்கெட்டை விஜய் சங்கர் வீழ்த்தினார். இதனால், அந்த அணி 165 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
இந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த அணிக்கு இன்னும் 90 பந்துகளில் 171 ரன்கள் தேவை என்ற கடினமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை மழை குறுக்கீட்டால் இந்த ஆட்டம் மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டாலும், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. காரணம், டிஎல்எஸ் விதிப்படி, பாகிஸ்தான் அணி இந்த நிலையில் 86 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பின்னர் மழை நின்றபின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பார்த்து பாகிஸ்தானுக்கு 30 பந்து களுக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இதனால் தோல்வியை தனது மனதில் ஏற்றிக் கொண்ட பாகிஸ்தான் அணி அப்படியே மெதுவாக ஆடிவிட்டு 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.