கிரிக்கெட்டிற்கு விடை கொடுக்கிறார் பாகிஸ்தான் வீராங்கனை அஸ்மாவிய இக்பால்
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அஸ்மாவிய இக்பால், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
30 வயதான அஸ்மாவிய இக்பால், கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமானவர். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர், மேலும் பெண்களுக்கான டி.20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் இவரையே சேரும். 2012ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்மாவிய இந்த சாதனையை செய்திருந்தார்.
சுமார் 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்மாவிய, திடீரென தான் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அஸ்மாவிய அதில் “ 14 ஆண்டுகாள எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. அதன் காரணமாக அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது நாட்டிற்கு இவ்வளவு ஆண்டுகள் பணியாற்றியதை எனக்கு கிடைத்த கவுரமாகவே கருதுகிறேன். நாட்டிற்காக பச்சை நிற சீருடையுடன் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது சக வீராங்கணைகளுக்கும், நண்பர்களுக்கும், பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.