அடுத்த ஆண்டு ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஜே ஷா கூறியதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமிஷ் ராஜா கருத்து தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இருதரப்பு தொடர்கள் 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறுவதில்லை. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக தடைப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதனால் இரு நாடுகளும் எப்படி பங்கேற்கும் என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: “இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காது. பொது இடத்தில் போட்டி நடத்தப்பட்டால் அது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.” என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இவர் இப்படி கூறியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“அடுத்த மாதம் மெல்போன் நகரில் ஐசிசி நடத்தும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்கிறோம். அநாகரிகமாக இப்படி நாங்கள் ஒருபோதும் பேச மாட்டோம். எங்கு பேச வேண்டுமோ அங்கு சரியாக பேசுவோம்.” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வரையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமிஷ் ராஜா பேசுகையில், “எங்களிடம் ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. ஆசிய கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர்களில் இருந்து பாகிஸ்தான் அணி நிர்வாகம் விலகிக் கொள்கிறோம். ஆசிய கிரிக்கெட் அசோசியேசன் ஆசிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை வளர்ப்பதற்காக ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. தற்போது கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக இந்த ஒன்றியம் பயன்படவில்லை. ஆகையால் நாங்கள் அதில் இருப்பது ஒரு பயனும் இல்லை.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் அதிலும் நாங்கள் பங்கேற்க வேண்டாம் என்று யோசித்து வருகிறோம். பல்வேறு நாடுகள் பங்கேற்கும் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இல்லாமல் வருமானம் எப்படி வரும். பெரிய அளவில் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்று ஐசிசி நன்கு தெரியும் என நினைக்கிறேன்.” என்றும் தனது பேட்டிகள் குறிப்பிட்டார்.