இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை ஆட விருப்பமாக இருக்கிறோம், ஆனால் இதற்காக பிசிசிஐ பின்னால் ஒடப்போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஈசான் மானி தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டுதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடைசியாக சர்வதேச போட்டி நடந்தது. ஈசான் மானி இருதரப்பு தொடர் தொடங்குவதைப் பற்றி சமீபத்தில் பேசியிருந்தார்.
மேலும் இப்போதெல்லாம் இந்தியா-ஆஸி., இந்தியா-இங்கிலாந்து தொடர்கள் ரசிகர்களை ஈர்ப்பது போல் பாகிஸ்தானுடனான தொடர்கள் ஈர்ப்பதில்லை. ஒருகாலத்தில் உலகில் எந்த அணியுடன் வேண்டுமானாலும் இந்தியா தோற்கலாம் ஆனால் பாகிஸ்தானுடன் மட்டும் தோற்பதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியாது, ஆனால் இப்போது அப்படியல்ல.
இது தொடர்பாக ஈசான் மானி கூறும்போது, “நான் ஒரு கருத்தைக் கொண்டுள்ளேன், அதை பிசிசிஐ-க்குத் தெரியப்படுத்துவேன்.
அதாவது இந்தியாவுடன் தொடரை ஆட விரும்புகிறோம், ஆனால் இதற்காக பிசிசிஐ பின்னால் ஓடிக்கொண்டிருக்க முடியாது. இந்தியாவின் கையில்தான் உள்ளது, அவர்கள் விளையாடத் தயார் என்றால் நாங்களும் இருதரப்புத் தொடருக்கு தயார்தான்.” என்றார்.
கடைசியாக 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காகப் பாகிஸ்தான் 2013-ல் இந்தியா வந்தது. இப்போதெல்லாம் ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.
கடைசியாக 2019 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதி 89 ரன்களில் இந்திய வென்றது நினைவிருக்கலாம்.