பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் தோனியை பாராட்டி ட்வீட் செய்தது கடுமையாக ட்ரோல் ஆகியுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட 70 அடித்து அசத்தினார் தோனி. 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய சென்னை அணியை இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற செய்தார். இந்தப் போட்டியில் தோனியின் ஆட்டத்திற்கு ரசிகர்கள் கடந்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ‘வின்டேஜ்’ தோனியை பார்க்க முடிந்ததாக பலரும் கூறினர். எப்பொழுதும் உலகத்தின் சிறந்த பினிஷர் தோனிதான் என்று அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.
அந்த வகையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் பெண் வர்ணனையாளர் ஜய்னப் அப்பாஸ், தோனியை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். முதல் ட்வீட்டில், “சிறந்த பினிஷர் என்பதை உலகிற்கு மீண்டும் காட்டுவதற்கு தோனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்ன ஒரு அற்புதமான ஷாட்”எனவும் மற்றொரு ட்வீட்டில், “மிகவும் எளிதாக பினிஷிங் செய்துவிட்டார்” என்றும் கூறியிருந்தார். அவ்வளவுதான், ஜய்னப்பின் இந்தக் கருத்திற்கு பலர் லைக் செய்து கருத்து தெரிவித்த போதும், ஏராளமான பாகிஸ்தான் ரசிகர்களோ ஜய்னப்பிற்கு எதிராக ட்ரோல் செய்து தள்ளினர்.
“ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் விளையாடவில்லை. இருந்தும் நீங்கள் அதனை தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள்” என்று ஒரு பாகிஸ்தான் ரசிகர் விமர்சித்து இருந்தார். மற்றொரு பாகிஸ்தான் ரசிகர், “அவர்கள் நம்முடைய விளையாட விரும்பாத போது நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள். ஒவ்வொன்றிலும் பாகிஸ்தானை அவர்கள் தனிமைப்படுத்த விரும்புகிறார்கள். நாட்டின் பெருமையை விட உங்களின் தனிப்பட்ட விருப்பம்தான் பெரிது போல் வெளிப்படுத்துகிறீர்கள். இது வெட்கக்கேடான விஷயம்” என்று கூறியிருந்தார். பல பாகிஸ்தான் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.