தொடர்ந்து 20 வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவி மோசமான சாதனையை படைத்திருக்கிறது பாகிஸ்தான் அணி.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20 போட்டிகள் முடிந்த பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டியிலும் இன்னிங்ஸ் தோல்வியை தழுவி தொடரை இழந்தது பாகிஸ்தான் அணி.
1999 ஆம் ஆண்டிற்கு பிறகு, இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில்5 தொடர்களில் 14 டெஸ்ட் போட்டிகளை பாகிஸ்தான் அணி ஆடியிருக்கிறது. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி, ஒரு அணியுடன் தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளை அதன் சொந்த மண்ணில் இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியுடன் தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகள் தோல்வியை தழுவிய அணிகள்:
- பாகிஸ்தான் – 14* டெஸ்ட்கள்
- இந்தியா – 9 டெஸ்ட்கள்
- வெஸ்ட் இண்டீஸ் – 9 டெஸ்ட்கள்
- தென்னாபிரிக்கா – 8 டெஸ்ட்கள்
- இங்கிலாந்து – 8 டெஸ்ட்கள் (இரண்டு முறை)
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி:
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்சை டிக்ளேர் செய்தது. வார்னர் முச்சதம் (335*) அடித்தார்.
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில், 94.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 287 ரன்கள் முன்னிலை பெற்றதால், ஃபாலோ ஆன் ஆன பாகிஸ்தான் அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்க்சை தொடர்ந்தது.
2-வது இன்னிங்ஸிலும் பாக். பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஆடியதால், 82 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஆஸ்திரேலிய அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.