ஹார்திக் பாண்டியா சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்க பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கபில்தேவ் கூறியதாவது:
ஹார்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம். அவரை சுதந்திரமாக விளையாட விடுங்கள். அவருடைய திறமை அசாத்தியமானது என்பதை நான் அறிவேன். எனவே ஹார்திக் என்னை விட பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் ஹார்திக் சிறந்த அணி வீரர் ஆவார்.
சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்க பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்க வேண்டும். இப்போதைக்கு ஹார்திக்கை என்னால் பேட்டிங் ஆல்-ரவுண்டராக மட்டுமே பார்க்க முடிகிறது. எனவே அவர் தனது பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவரால் முழுமையான ஆல்-ரவுண்டராக உருவாக முடியும்.
நான் விளையாடிய காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் பாகிஸ்தான் தான் வெற்றிபெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுவார்கள். ஆனால், இப்போதைய சூழலில் பாகிஸ்தானை இந்தியா எளிதில் வீழ்த்திவிடும் என்று நம்புகிறேன்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் 80:20 என பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. ரசிகர்கள் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரும்புவது எனக்கு புரிகிறது. ஆனாலும், குறைந்தபட்சம் 60:40 என பந்துவீச்சுக்கு சற்று சாதகமா இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 250 ரன்கள் என்பது குறைந்தபட்ச கடின இலக்காக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும்,
இந்தியா, நியூஸிலாந்து இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில், கே.எல்.ராகுல் துவக்க வீரராக களமிறங்குகிறார். எனவே நடுவரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இடம்பெற வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் வேறு சில மாற்றங்கள் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
ஷிகர் தவன் நிலை குறித்து அடுத்த 10 அல்லது 12 நாட்களில் தெரிந்துவிடும். ஷிகர் தவன் போன்ற ஒரு வீரரின் நிலை குறித்து அவசரமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக சிறிய கால அவகாசத்துக்குப் பின்பு முடிவெடுப்பது சரியானதாக இருக்கும்.
எனவே மாற்று வீரரை தேர்வு செய்வது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்படும். இருப்பினும் உடனடியாக ஒரு வீரர் அறிவிக்கப்பட்டு அவர் நேரடியாக களமிறங்குவதற்கு பதிலாக மாற்று வீரர் முன்கூட்டியே அணியுடன் இணைந்து பயற்சிபெறுவது மிகச்சிறந்ததாக இருக்கும்.
இங்கிலாந்தில் போட்டி என்றாலே இதுபோன்ற மழை இடையூறுகள் ஏற்படுவது எல்லாம் முன்பே தெரிந்தது தான். இந்தப் போட்டியில் மழை பாதிப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா 2 போட்டிகளை முழுமையாக விளையாடியுள்ளது அதிர்ஷ்டவசமானது தான் என்று தெரிவித்தார்.