“ரிஷப் பண்ட் வேற லெவல் பிளேயர்.. அவருக்கு பந்து வீசுவது என்பது..” – மிரண்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்!

ரிஷப் பண்ட் எப்படிப்பட்ட பேட்ஸ்மன் என்பதை மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு பேட்டியளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் டாம் பெஸ்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்காவது நாள் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து 321 ரன்கள் பின்தங்கி இருந்தது. அபாரமாக ஆடிய புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் கடந்தனர்.

இதில் புஜாரா 73 ரன்களுக்கும், துரதிஸ்டவசமாக பண்ட் 91 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர் இதில் ரிஷப் பண்ட் 88 பந்துகளுக்கு 91 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியைப் போலவே அதிரடியை வெளிப்படுத்தியிருந்தார். இதில் ஐந்து சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் இந்த பேட்டிங் திறமை குறித்து மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவருமான டாம் பேஸ் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்ட வீரர். அவர் விளையாடும் விதத்தைப் பார்க்கையில் மற்றவர்களைவிட தனித்துவமாக இருந்தது. எந்த வகையிலும் எந்த ஒரு பவுலருக்கும் அவர் அச்சம் காட்டவில்லை. அவரது ஆட்டத்திலேயே முழு கவனத்தை செலுத்தியதனால் அதிக ரன்களை குவிக்க முடிந்தது. அவருக்கு எந்த விதத்திலும் பந்துவீசி அச்சுறுத்த இயலாது. அவராகவே முன்வந்து தவறு செய்தால் மட்டுமே அவரை வீழ்த்த முடியும்.

அப்படி ஒரு வேலையில்தான் சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது நான் விக்கெட்டை வீழ்த்தினேன். இல்லையெனில் அவர் இன்னும் பல ரன்களை அடித்திருக்கக்கூடும். முதல் போட்டியை பொறுத்தவரை யார் வெற்றி தோல்வி என்பது தற்போது கூற இயலாது. ஏனெனில் இந்திய வீரர்கள் எந்த நேரத்திலும் மீண்டு வந்து சிறப்பாக விளையாட கூடியவர்கள். ஆகையால் அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்த இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தாலும் போட்டியை வென்றால் மட்டுமே முழு மகிழ்ச்சி கிடைக்கும்.” என மனம் திறந்து பேசுகிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.