ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்ட வீரர் என புகழாரம் சூட்டியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா.
இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரராக இளம்வீரம் ரிஷப் பண்ட்டை ரசிகர்கள் மட்டுமல்லாது பிசிசிஐ நிர்வாகமும் கருதுகிறது. ஆனால், ஒரு சில போட்டிகளை தவிர தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே பண்ட் வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் இவர் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். இருப்பினும், இந்திய அணி நிர்வாகம் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. காரணம், இவர் எந்தநேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அதேநேரம் எளிதாக பந்தை சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசக்கூடியவர்.
கீப்பிங் தற்போது வரை சொதப்பலாக இருக்கிறது. இருந்தாலும், தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. அதன் அழுத்தங்களை கடந்து வரவேண்டும் என்பதற்க்காக இந்த தொடர் வாய்ப்புகள் அவர்க்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா. அவர் கூறியதாவது,
“ரிஷப் பண்ட் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை உருவாக்கி அணிக்குள் இடம்பிடித்தவர். மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எம்எஸ் தோனிக்கு மாற்று வீரராக ஒருவர் விரைவில் கிடைப்பாரா? என்று சிலர் எதிர்பார்த்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ அப்படி பார்த்தார்கள். ஆனால், அவர் முற்றிலும் மாறுபட்ட வீரர்.
உலகக்கோப்பைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால், இது இக்கட்டான காலம் என்பது எனக்குத் தெரியும். இன்னொரு விக்கெட் கீப்பரை வைத்துக் கொண்டு கூட இந்திய அணி செல்லலாம். ஆனால் ரிஷப் பண்ட் மீதான அதிகப்படியான நெருக்கடி தேவையில்லாதது.
மிகவும் வெற்றிக்கரமான அணியாக திகழும் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு பண்ட் விரைவில் நல்ல நிலைக்கு திரும்பினால், இந்திய அணிக்கு புதிய உத்வேகம் கிடைக்கும்” என்றார்.